அஷ்டமா சித்திகள் - 8(பிரணாயாமும் - குண்டலினி-1)




நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம்கண்டு ஆங்கேமுடிந்து முதல் இரண்டும்
காலம் கண்டான்அடி காணலும் ஆமே

 
                                                                                             திருமந்திரம்


விளக்கம்


மனித உடலில் மட்டும் ஆறு ஆதார நிலைகள் அமைந்துள்ளன அவற்றை தாமரை மலர் என்றும் சக்கரம் என்றும் கூறப்படுகிறது. அந்த ஆறு ஆதார நிலையை கடந்தவன் சிவத்தன் திருவடியை காணலாம்  அந்த ஆறு ஆதாரங்கள் என்னவென்று பார்த்தால் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் அஞ்ஞை.


மூலாதாரம் நான்கு இதழ்கள் கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதுபோல் ஒவ்வொரு ஆதாரங்களையும் குறிப்பிட்ட இதழ்கள் கொண்டு இருக்கும். மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை இயங்க செய்து, மற்ற ஆதார நிலைகளில் கடந்து புருவ நடுவில் மூல முதல்வனான பரம்பொருளை தியானம் செய்ய, அச்சக்தி கபாலம் வழியாக மேலே சென்று சகஸ்ர தளத்தை அடையும். அங்கே முக்காலத்தையும் கடந்த சிவன் திருவடிகளை காணலாம்.



பொருள்


சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை, இரண்டும் இருந்தால்தான் ஜீவிக்க முடியும் ; சக்தி இல்லை என்றால் சிவன் சவமாக காட்சி தருவாரன். அந்த சக்தியின் பெயரே குண்டலினி (ஸ்ரீ சக்கரம் அடிப்படை இதுவே) என்பதாகும். இந்த குண்டலினி சக்தி நமது உடலில் முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் பிராண சக்தியாக உறக்கம் கொண்டுள்ளது. இது பாம்பைப் போல் சுருண்டு இருப்பதால் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இது உறங்கும் இடம் மூலாதாரம் சாதனைகள் (பயிற்சி) மூலம் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்யலாம் அதற்கு பிராணாயாமம் முக்கியமானதாக விளங்குகிறது.



இந்த உலகில் பிறந்த அனைத்து மனித உடல்களில் குண்டலினி சக்தி உறங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சக்தியை எவரொருவர் முறையான சாதனையால் முயற்சி செய்கிறாரோ அவருக்கு குண்டலினி சக்தி எனும் சித்தி கிட்டும்.


சூஷீம்னா நாடி என்பது முதுகுத்தண்டு குதத்திற்கும், பிறப்பு உறுப்புக்கும் நடுவில் இருந்து தொடங்கி கபாலத்தின் அடி வரை நீண்டிருக்கிறது.



முதுகுத் தண்டின் இரண்டு பக்கங்களிலும் இட பிங்கள என்று இரு நாடிகள் உள்ளன. இந்த இரு நாடிகளுக்கும் இடையில் ஒரு கூடு போன்று கால்வாயில் சூஷீம்னா நாடி ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் அடிப்பகுதியில் குண்டலினி சக்தி ஒரு யோக நிலையில் ஆழ்ந்துள்ளது.



குண்டலினி சக்தி தட்டி எழுப்பும் போது நேராக சஹஸ்ராரத்திற்கு பாய்ந்து சென்று விடுவதில்லை.உதாரணமாக மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி எழுப்பி படிப்படியாக மேலே சுவாதிஷ்டானம் என்னும் இரண்டாவது நிலையை அடையும் போது அங்கு சுவாதிஷ்டானம் ஆறு இதழ்கள் கொண்டிருக்கும் அந்த ஆறு இதழ்களை விரித்து குண்டலினியை மேலே கொண்டு வரவேண்டும். இப்படியாக ஆறு நிலைகளை கடக்க வேண்டும்.



தியானத்தாலும் பிரணாயாமத்தாலும் ஆறு ஆதாரங்களை திறந்து குண்டலினி சக்தியை கொண்டு வர வேண்டும் ஒவ்வொரு ஆதாரத்திலும் குண்டலினி சக்தியை பிரவேசிக்கச் செய்து கீழ் ஆதாரங்களை மூடி மேல் ஆதாரங்களை திறந்து சஹஸ்ராரத்தில் குண்டலினி சக்தியை சேர்ப்பது யோகமாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அடையும்  குண்டலினி சக்தி சாதகனை சமாதி நிலை அடையும் பாக்கியம் பெற செய்கிறது.


ஆதாரசோதனையால் நாடிசுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ஓளி
போதலயத்துப் புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெட்டால் தான் சக மார்க்கமே.

                                                                                                             திருமந்திரம்


விளக்கம்



உடலில் பொருந்தி உள்ள ஆறு ஆதாரங்களுக்கு உரிய மந்திரங்களை சொல்லி தூய்மை செய்து மூச்சுப் பயிற்சி செய்வதால் நாடிகள் நலம் அடையும். சூரிய சந்திர மண்டலங்களில் கலைகள் பரவும். ஆன்மாவில் ஐம்பொறிகளும் தன் வசமாக அடங்கி நிற்பது தோழமை நெறியாகும்.



மேதாதி என்றால் அகர மகர உகர கலைகள் என்று அர்த்தம்.


ஒவ்வொரு ஆதாரத்துக்கு உரிய மந்திரங்களை ஜெபித்து குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து ஒவ்வொரு இதழாக கடந்து வரவேண்டும் என்று பாடல் சொல்கிறது.


மூலாதாரம்


நான்கு இதழ் கொண்ட தாமரை அல்லது சக்கரம் என்று சொல்லப்படுகிறது இதற்கு உண்டான நிறம் சிகப்பு இதன் அதிதேவதை கணபதி மிருகம் யானை.

குதத்தில் இருந்து இரண்டு விரற்கடை மேலாகவும் பிறப்புறுப்புக்கு இரண்டு விரற்கடை கீழாகவும் இந்த மூலாதாரம் அமைந்துள்ளது. இதன் மத்தியில் முக்கோணத்தில் குண்டலினி சக்தி பாம்பு வடிவில் சுருண்டு உறக்க நிலையில் இருக்கும். தன் வாலை தன் வாயால் கவ்விக் கொண்டிருக்கும். பிரம்ம நிலையில் வாயில் கதவை மூடியவறு படுத்திக் கொண்டிருக்கும்.


பிராணாயாமத்தின் போது சாதகன் இச்சக்கரத்தின் தியானிக்கும் போது குண்டலினி சக்தி பற்றிய சகல ஞானத்தையும் பெறுவான் அது எப்படி எழுப்புவது என்ற வழியும் மின்னல் போன்று அவனுள் பளிச்சிடும்.


கோடான கோடி ஜீவன்களில் ஒருவருக்கு மட்டுமே ஈஸ்வர கிருபை என்னும் பரிபூரண கடாட்சம் கிட்டிய மாத்திரத்தில் எம் முயற்சியும் இன்றி குண்டலினி விழிப்பு ஏற்பட்டு சகஸ்ரார என்னும் சமாதி பாதம் கிட்டும் அந்த ஜீவன் எத்தனை ஆயிரம் ஆண்டுகாலம் தவம்செய்திருக்குமோ?.



வாழ்க வளமுடன்



.

கருத்துரையிடுக

0 கருத்துகள்