மத ஸம்யம்ய மச்சித்தோ யுத்த அஜீத் மத்பர !!
பகவத் கீதா
பொருள்
ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்திரத் : பிரம்மச்சரிய விரதத்தில் நிலைத்து நின்று
விகதபீ : அச்சமின்றி
ப்ரஸாந்தாத்மா : நன்கு மன அமைதி பெற்ற
யுத்த : விழிப்புணர்வோடு கூடிய யோகி (அதாவது தியானம் செய்யும் நேரத்தில்)
மந : தன் மனதை
ஸம்யம்ய : அடக்கி
மத்சித்த : என்னையே மனதில் நினைத்தவனாக
மத்பர : என்னைய அடையத்தக்க சிறந்த கதி என கொண்டு
ஆஸீத : நிலைபெற்றிருக்க வேண்டும்.
பிரம்மச்சரிய விரதத்தில் நிலைத்து நின்று அச்சமின்றி நன்கு மன அமைதி பெற்ற தியான காலத்தில் விழிப்புணர்வோடு கூடிய யோகி தன் மனதை அடக்கி என்னை மனதில் நினைத்தவனாய் என்னையே அடையத்தக்க சிறந்த கதி என கொண்டு நிலைபெற்று இருக்க வேண்டும்.
விளக்கம்
பிரம்மச்சரிய விரதம் என்று சொல்லியே சுலோகத்தை பகவான் எடுத்துரைக்கிறார். தத்துவ மார்க்கத்தில் பிரம்மச்சரியம் என்பது வேறாக இருந்தாலும் பொதுவாக உடலின் சுக்லத்தை அதாவது விந்துவை கட்டுப்படுத்துவது தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. சுக்கிலம் ஒரு விலை மதிக்க முடியாத பொருள் என்று சொல்லப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அதாவது இந்த சுலோகத்தையே சுக்லத்தையே குறிப்பிடுகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் வலிமை, மன வலிமை, ஆத்ம வலிமை இவைகளை பெறவேண்டு என்றால் சுக்லத்தை கட்டுப்படுத்தாமல் மேற்கொண்ட மூன்றையும் அடைய முடியாது. பிரம்மச்சாரிகளுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு அந்தக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் சுக்லத்தை காப்பாற்றுவதில் மிகவும் உதவியாக இருக்கும். எவன் ஒருவன் உண்மையில் சுக்லத்தை காப்பாற்றுகிறானோ அந்த சுக்லத்தின் மூலம் உடலுக்குள் ஒரு தனிப்பட்ட மின்சார சக்தி உண்டாகிறது. அதனால் ஏற்படும் தேஜஸின் காரணமாக பிராணனும், மனதின் போக்குகளும் தாமாகவே நிலைத்து விடும் அளவுக்கு அது ஆற்றல் மிக்கதாக இருக்கிறது.
இன்றைய நாகரீக உலகில் எவ்வளவு முயன்றாலும் தியானம் கைகூடுவதில்லை என்பதற்கும், மனம் பகவானிடம் நிலைத்து நிற்பதில்லை என்பதற்கு முக்கியமான காரணம் சுக்லம் கட்டுப்படாது தான். திருமணம் புரிந்து கொண்டு மனைவியுடன் கூட ஒருவித கட்டுப்பாட்டுடன் அளவோடு உறவாடுவது கூட பிரம்மச்சரிய நிலைதான். இது தியானத்திற்கு பெரிதும் உதவும்.
யோக சாதனை புரியும் வரை முதலிலிருந்தே பிரம்மச்சரிய கட்டுப்பாடுகளை தளராமல் காப்பாற்றி வருபவனுக்கு விரைவாகவும் எளிதாகவும் தியானம் யோகம் பயனளிக்கும்.
சாஸ்திரங்களில் பிரம்மச்சாரிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் அழகாக சொல்லப்பட்டிருக்கின்றன அவற்றில் முக்கியமானவை பிரம்மச்சாரி ஒவ்வொரு நாளும் நீராடவேண்டும்; சந்தனம் பூசிக் கொள்ள கூடாது; மை தீட்டிக் கொள்ளக்கடாது; தைலம் தேய்த்துக் கொள்ளக்கூடாது; அத்தர் முதலிய வாசனைப் பொருட்களை தீண்டக்கூடாது; பூமாலை அணியக்கூடாது; ஆடல் பாடல்களில் ஈடுபடக்கூடாது; குடை பிடிக்கக்கூடாது; மெத்தையில் படுக்க கூடாது;
பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது; பெண்களைப் பற்றி வீண் பேச்சு பேசக் கூடாது; அளவோடு எளிய உணவை உண்ண வேண்டும்; மிருதுவான அல்லது நைஸான துணியை உடுத்த கூடாது;தெய்வம், ரிஷிகள், பெரியோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்; யாரிடமும் விவாதம் செய்யக் கூடாது; யாரையும் நிந்திக்க கூடாது; முக்கியமாக உண்மை பேச வேண்டும்; யாரையும் அவமதிக்க கூடாது; அகிம்சை விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்;
காம குரோத லோபங்களை துறக்க வேண்டும்; தனியாகப் படுக்கவேண்டும்; சுக்லம் ஒரு பொழுதும் வெளிப்படக் கூடாது; இந்தக் கட்டுப்பாடுகளை நன்றாக கடைபடிக்க வேண்டும். இதுதான் பிரம்மச்சரிய விரதம் என்று பல சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. பகவான் கிருஷ்ணர் கீதா உபதேசத்தில் சொல்லவருவது, எவனொருவன் சுக்லத்தை கட்டுப்படுத்துகிறானோ அவன் வெற்றியின் அருகில் இருக்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.
64 துளி ரத்தம் ஒரு துளி விந்து என்று சொல்லப்படுகிறது. ஒரு தடவை விந்து வெளியேறிவிட்டால் கத்தியால் ஏற்பட்ட காயத்தில் இருந்து எவ்வளவு ரத்தம் வீணாகுமோ அவ்வளவு ரத்தம் வீணாக்கப்படுகிறது. ரத்தம் பிராண சக்திக்கு ஆதாரம். ஆகையால் இயற்கையாகவோ செயற்கையாகவோ விந்து வெளிப்பட்டால் ஆண்மை இழப்பு மிகப்பெரிதாக இருக்கும் என்று உணர வேண்டும். பிரம்மச்சாரியம் காத்து குண்டலினி சக்தி உயிர் தருவதற்கும் உதவியாக இருக்கும்.
இதையே திருமூலர் கீழ்க்கண்ட பாடலில் சொல்கிறார்.......
கட்டக் கழன்று கீழ்நான்றுவீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்டம் இருக்கநமன்இல்லைதானே
திருமந்திரம்
பொருள்
கட்ட என்ற சொல்லுக்கு விந்து என்றொரு பொருள் உண்டு.
கழன்று கீழ் நான்று வீழாமல் என்றால் அது வெளிப்பட்டு கீழ்நோக்கி விடாமல்; அட்டத்தை கட்டி அடுப்பை அணைகோலி என்றால் தொண்டைக்குழியில் இடகலை பிங்கலை சுழுமுனை மூன்றும் சேர்ந்து அடுப்பான நெற்றிப் புருவ நடுவில் தேக்கி; மேற் பையை நாட் கோத்து அதாவது கர்ப்பப்பக்குள் விந்து போகாமல் தேக்கி வைத்து; நட்டம் இருக்க என்றால் நடு நாடியில் (சுக்ஷம்னா நாடி) பாயும் மூச்சுக்காற்றை மனதை நிறுத்தி தவயோகம் செய்பவர்களுக்கு; நமன் இல்லை அதாவது மரணம் இல்லை.
விளக்கம்
சுக்கிலத்தை கட்டி அது வெளிப்பட்டு கீழே நோக்கி வழியவிடாமல் உள்நாக்கு பகுதியில் இடைகலை பிங்கலை சுழுமுனை என்ற மூன்றும் சேர்ந்து நெற்றிப் புருவ நடுவில் தேக்கி கர்ப்பப் பைக்குள் சுக்லம் போகாமல் தேக்கி வைத்து, நடு நாடியில் பாயும் மூச்சுக்காற்றில் மனதை நிறுத்தி தவயோகம் செய்பவர்களுக்கு என்றும் மரணம் இல்லை என்கிறார் திருமூலர்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்