திருவம்பலச் சக்கரம்





"திருவம் பலமாகச்  சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமாக இருபத்தைஞ்சு ஆக்கித்
திருவம் பலமாகச் ஜெபிக்கின்ற வாறே"

                                                                                                                                                     (திருமந்திரம்)



யந்திரம் (சக்கரம்)





பொருள்:-


திரு அம்பலமாக விளங்கும் உயர்ந்த சக்கரத்தில் குறுக்கிலும் நெடுக்கிலும் ஆறு கோடுகள் வரைந்து இச்சக்கரத்தை இருபத்தைந்து அறைகள் ஆக்கி அதாவது கட்டங்கள் ஆக்கி அவற்றில் முறையே "சிவாயநம" என்னும் ஐந்தெழுத்தை செபியுங்கள்.


விளக்கம்


அம்பலம் என்றால் ரகசியம் இல்லாமல் அனைவராலும் அறியப்படும் நிலை, அதாவது தில்லை அம்பலம் என்று பொருள். சபை என்று பொருளும் கொள்ளலாம்.
திருவம்பலம் என்றால் சிதம்பரம் அம்பலவாணன் என்றால் சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜப் பெருமான்.


ஆடல்வல்லான் எம்பெருமானுக்கு பஞ்ச சபைகள் உண்டு அவை

திருவாலங்காட்டில்                                      ரத்தின சபை

மதுரை.                                                      வெள்ளி அம்பலம்

திருநெல்வேலி.                                     தாமிர சபை

திருக்குற்றாலம்.                                  சித்திர சபை

சிதம்பரம்.                                              பொன்னம்பலம்


இந்த ஐந்து சபைகளில் சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலம் சிறப்பு வாய்ந்தது சீதாகாயப் பெரு வெளியாகிய சிற்றம்பலமே. இதன் பெருமையை கூற மானுடப் பிறவி போதாது.



பொன்னம்பலத்தில் தான் ஐந்து தாண்டவம் எம்பெருமான் ஆடும் சிறப்பு பெற்றது. அற்புதத் தாண்டவம், பிரளயத்தாண்டவம், சங்காரத் தாண்டவம், ஆனந்தத் தாண்டவம் மற்றும் அனவரதத் தாண்டவம்.



இறைவன் அணுவினும் அணுவாய் அப்பாலுக்கப்பாலாய் உருவமற்ற பெருவெளியில் அருவுருவமாக நிறைந்து எங்கும் பேரொளியாய் பிரகாசிக்கின்றார் என்ற ரகசியம் விளங்கும் போதோ அல்லது உணரும்போதோ, அந்தப் பேரொளியை ரகசிய தரிசனமாக பொன்னம்பலத்தில் ஆடல்வல்லானுக்கு வலப்புறத்தில் பொற்றளங்களால் குறித்துக் காட்டுகின்றனர். இதுவே சிதம்பர இரகசியமாகும்.



திருமூலர் சிவபெருமானுக்கு என்று சிதம்பர நடனத்திற்கு அமைத்த யந்திர சக்கரமே "திருவம்பலச் சக்கரம்".



"சிவாய நம" என சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்றாள் தமிழ் கிழவி


இதையே திருமூலர்

வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே யருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் சிம்பு பொன்னே



பொருள்:-

சிவாயநம என சிந்தித்து அதாவது ஓயாது தியானம் செய்துகொண்டிருந்தால் பிறவித் துன்பம் இல்லாது ஒழியும்; இப்படி செபித்து வந்தால் இறைவன் ஆனந்த நடனம் கண்டு இன்புறலாம். இப்படியாக ஜபம் செய்பவர்கள் உள்ளம் பந்தபாசம் அழுக்குகள் நீங்கி பொன்போல் ஒளிவிடும். களிம்பேறிய செம்பு அழுக்கு என்று பொன் போல் பிரகாசிக்கும்.



விளக்கம்


சிவாய நம என ஐந்து எழுத்தை ஓதினால் செம்பு பொன்னாகும். செம்பு ரசக்குளிகையை (ரசவாதம்) பயன்படுத்தி பொன் ஆக்குவது போல், ஆன்மாக்கள் குரு  அருளால்  ஸ்பரிசத்தால், உபதேசத்தால் ஞான ஒளி பெற்றலாம். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருவம்பலச் சக்கரத்தை வடிவமாக்கி தியானித்து வந்தால் சிவதரிசனம் கண்டிப்பாக கிடைக்கும்.



வாழ்க வளமுடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்