"ககராதி ஓரைந்தும்காணிய பொன்மை
அகராதி ஓர் ஆறு அரத்தமேபோலும்
சகராதியோர் நான்குந்தான்சுத்த வெண்மை
ககராதிமூவித்தை காமியா முத்தியே".
பொருள்
பழைய தமிழ் எழுத்துக்கள் 51 வழக்கில் இருந்துள்ளன.
"க" கரம் முன்பு ஐந்து இனமாக வழங்கி இருக்கிறது. இந்த "க" கர எழுத்துக்கள் பொன் நிறம் உடையவை.
"அ" கரம் முதலான ஆறு எழுத்துக்கள் செந்நிறம் கொண்டவை
"ச" கர எழுத்துக்கள் நான்கும் தூய வெண்ணிறமானவை.
"க" கரம் முதலான மூன்று வகையாகக் கூறப்படும் மந்திரம் விரும்பிய வாழ்வை தருவதாகும் என்று கூறுகிறார் திருமூலர்.
விளக்கம்
வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்துக்கள் ஆகும். வட்டெழுத்து பயன்பாட்டில் இருந்த காலத்தில் வாழ்ந்தவர் திருமூலர். அவர் காலத்தில் தீந்தமிழின் கண் ஐம்பத்தோரு எழுத்துக்கள் வழக்கில் இருந்தன (உயிர் - 16; மெய்-35). சேர மண்டலம் பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழத்துகளே இடம் பெற்றுள்ளன.
முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான 11ஆம் நூற்றாண்டுக்கு பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கண்ணெழுத்துக்கள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் "சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்னும் தொடரால் அறியலாம் (சிலம்பு 5:112)
பழங்காலத்தில் கற்பாறை செப்பேடு ஓலைச்சுவடி போன்றனவற்றில் எழுதினர் அந்தந்தப் பொருளின் தன்மைக்கேற்ப எழுத்துக்களின் வடிவங்கள் அமைந்தன பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகள் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன ஓலைகளில் நேர்கோடு புள்ளியையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகள் அதிகமாக பயன்படுத்தினார்கள்.
அகார உகார குறில் எழுத்துகளை குறிக்க எழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.
அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துகளை அடுத்து பக்க புள்ளி இடப்பட்டால் அதை நெடிலாக கருதப்பட்டன (க. = கா; த.= தா).
அதுபோல் எகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஔ கார வரிசை எழுத்துக்களாக் கருதப்பட்டனர். (கெ..=கௌ; தெ..= தௌ ).
இப்படியாக தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தவர் வீரமாமுனிவர் வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். "எ" என்னும் எழுத்துக்கு கீழ் கோடிட்டு "ஏ" என்னும் எழுத்தை நெடில் ஆகவும் ஓ என்னும் எழுத்துக்கு குறியீட்டு எண்ணும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
இப்படியாக சொல்லிக் கொண்டே சென்றால் இது தமிழ் ஆராய்ச்சி நூலாக போய்விடும். நிற்க..
"க" கராதி வட்டெழுத்து ஐந்து அவைகள்:-
க ஏ சி ஐ கிரீம்
"அ" கராதி வட்டெழுத்து ஆறு அவைகள்:-
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
"ச" கராதி வட்டெழுத்து நான்கு அவைகள்:-
க, அ, ச, ரீம்
ஓரில் இதுவே உரையும்இத் தெய்வத்தைத்
தேனில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண மனமின்ப முத்தியுந்
தேரில் அறியுஞ் சிவகாயந்தானே
பொருள்
புவனாபதிதெய்வத்திற்கு இணையான தெய்வம் வேறில்லை என்பதை நாம் ஆராய்ந்து சொல்லும் உண்மை எனவே நான் கூறுவதை கேட்பாயாக மழை மேகம் போல் அருள் பொழியும் முக்கோணச் சக்கரத்தில் மனம் பொருந்தி தியானிக்க நல்ல மனம் மகிழ்ச்சி இன்பம் சிவ அருள் கிட்டும்.
மந்திரம்
"ஏதும் பலமாய் இயந்திரராசன்அடி
ஓதிக்குருவின்உபதேசம் உட்கொண்டு
நீதங்கும்அங்க நியாசம் தனைப்பண்ணிச்
சாதங்கெடச் செம்பிற் சட்கோணந் தானிட"
பொருள்
எல்லாவிதமான பலன்களையும் தரக்கூடிய யந்திரங்களுக்கெல்லாம் அரசனான புவனாபதி சக்கரத்தின் திருவடி பணிந்து வணங்கி குருவாகிய ஆசான் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை மனதில் உரு ஏற்றிக்கொண்டு இருந்தால் உடலில் தங்கியுள்ள ஆதாரங்களில் அந்த மந்திரங்கள் சென்று பிறவித்துயர் நீங்க வழி செய்யும். அதற்கு முன்பு இந்த சக்கரத்தை செப்புத் தகட்டில் அறுகோண சக்கரமாக வரைந்துக் கொள்வாயாக; என்று சொல்கிறார் திருமூலர்.
"சட்கோணந் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு
அக்கோணமாறின் தலையில்ரீங்கார மிட்டு
எங்கோண முஞ்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட்டு அக்கரம் ஈம்முதன் மேலிடே".
பொருள்
மறைந்த அறுகோண சக்கரத்தில் சிரீம் க்ரீம் என்றெழுதி கோணத்தின் 6 முனைகளிலும் இரீங்காரம் அமைத்து கோணங்களையும் சுற்றியே அழகிய வட்டம் அமைத்து அதன்மேல் பின்னர் 16 உயிர் எழுத்துக்களை வரைக (பழங்காலத் தமிழ் எழுத்துக்கள் உயிர் - 16; மெய் - 35; ஆக 51 எழுத்துக்கள்)
மந்திரம்
"இட்ட இதழ்கள் இடைய அந்தரத்திலே
அட்டஹவ் விட்டத்தின் மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டு வாமத்தாங் கிரோங்கென்று மேவிடே".
பொருள்
மேலே சொன்னபடி தாமரை இதழ் வடிவிலான சக்கரத்தில் இதழ்களின் இடையில் "ஹவ்" என்று எழுதி அதன் மேல் "உ" எழுத்தை வரைந்து, நெருங்கியுள்ள இதழ்களின் மேலே கிரோம், சிரோம் என்று குறித்துப் பின் இடப்பக்கம் கிரோம் என எழுதி வைக்க வேண்டும்.
மந்திரம்
"மேவிய சக்கரமீது வலத்திலே
கோவை அடைவே குரோங்சிரோங் கெனாறிட்டுத்
தாவில்ரீங் காரத்தாற் சக்கரம் சூழ்ந்து
பூவைப்புவனா பதவியைப் பின் பூசியே".
பொருள்
மேலே அமைக்கப்பட்ட சக்கரத்தின் மேல் வலப்பக்கம் மாலை கோத்தது போலக் "கிரோம்"; "சிரோம்" என்று குறித்து, சக்கரத்தைச் சுற்றி குறையில்லாத ரீங்காரம் எழுதிச் சக்தியாகிய புவனாபதித் தேவியைப் பூஜிப்பாயாக.
"பூசிக்கும்போது புவனா பதிதன்னை
ஆசற்று அகத்தியரின் ஆவாகனம் பண்ணிப்
பேசிய பிரமாணப் பிரதிட்டை அது செய்து
தேசுற்றிட வேதியானம் அதுசெய்யே"
பொருள்
புவனா பதி தேவியை பூசிக்கும் போது மனத்தூய்மையுடன் உள்ளத்தில் அன்னையை எழுந்தருளச் செய்து தேவிக்குரிய மந்திரங்களை அச்சக்கரத்திலே பொருந்தும் படி தியானித்து அந்த அட்சரத்தில் மந்திரத்தை நிலைகொள்ள செய்ய வேண்டும்.
நினைத்ததெல்லாம் நடக்கும்.
"சேவிப்பதன் முன்னே தேவியைஉத் வாகனத்தால்
பாவித்திதய கமலம் பதிவித்தங்கு
யாவர்க்கும் எட்டா இயந்திரராசனை
நீவைத்துச்சேமி நினைந்தது தருமே".
அம்மையை அதாவது ஆதிபராசக்தியை வணங்கி துதிப்பதற்கு முன்பாக புவனாபதி(புவனேஸ்வரியை) தேவியை உன் உள்ளத்திலே எழுந்தருளிச்செய்து மனத் தாமரையில் அவள் நீங்காது இருக்க சதா சர்வ காலமும் அவளை நினைத்தபடி எவர்க்கும் எட்டாத புவனாபதி சக்கரம் ஆகிய யந்திரத்தை மனதில் வைத்து வணங்கி வர நீ நினைத்த தெல்லாம் உனக்கு கை கூடும் என்று சொல்கிறார்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்