கடன் தீர்க்கும் செவ்வாய் பகவான்







"செங் கண்ணன் செம்மேனிச் செல்வன் செம்மலையினான்
அங்கையில் வேல் சூலம் அடற்ககை கொள்-மங்கலத்தான்
போதும் தகரேனும் மூர்த்தி நில மகட்குக்காதற் சேர் அங்காரகன்."


வேண்டுவோர்க்கு மங்களங்களைத் தருவதால் செவ்வாய்க்கு மங்களன் என்று பெயர் உண்டு.


செவ்வாயின் வேறு பெயர்கள்


 அங்காரகன், குஜன், பௌமன், லோகி, தாங்கன், குமாரன், ரக்தவஸ்த்ரதரன், ரக்தாய தேஷணன், செம்மீன் முதலிய பெயர்களும் உண்டு.

"முந்நீர் நாப்பண் திமில்சுடர் போல்ச் செம்மீன் இமைக்கும் மாகவிசும்பின்" 

புறநானூறு பாடல்.



செவ்வாய் கிரக வரலாறு


செவ்வாயின் பிறப்பைப் பற்றி பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன.






லிங்க புராணத்தில் அங்காரகன் பிறப்பை பற்றி விவரிக்கப்படுகிறது. அக்னியும் விகேசி அன்னியோன்னியமாக இருந்த பயனாக, விகேசி ஓர் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். அந்த குழந்தை அங்காரகன் என்று சொல்லப்படுகிறது.


மற்றொரு கதை எம்பெருமான் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் இருக்கும் பொழுது அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை துளி ஒன்று தெறித்து கீழே விழுந்தது அதில் தோன்றியவன் அங்காரகன் என்றும் பரத்வாஜ முனிவரின் மகனாக பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் தான் மங்கலம் என்று சொல்லக்கூடிய அங்காரகன் என்றும் புராணங்கள் கூறுகின்றன.



மச்ச புராணத்தில் சினங்கொண்ட சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய வீரபத்திரர் தட்சனின் யாகத்தை அழித்த பராக்கிரமத்தை பார்த்த தேவர்கள் நடுநடுங்க அவர்களுக்கு மனம் இறங்கிய வீரபத்திரர் தன் உருவத்தை மாற்றி அங்காரகன் ஆனார் என்று சொல்லப்படுகிறது.



மற்றொரு கதை படி செவ்வாய் முருகனின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. சூரபத்மனை அழிக்க ஒரு குமரனை உருவாக்க வேண்டிய நேரம் வந்தது இதற்காக சிவனும் பார்வதியும் இணைந்த ஆகவேண்டும், ஆனால் அப்போது சிவன் தவத்தில் இருந்தார். சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை அழைத்தான் இந்திரன். மன்மதன் ஒருவித கர்வத்துடன் சிவனின் தவத்தைக் கலைக்க போக அவனை தன் நெற்றிக்கண்ணின் அக்னியால் எரித்தார் சிவபெருமான். இதன் பிறகு சிவன் பார்வதி திருமணம் நடைபெற்றது. 


சிவன் பார்வதிக்கு பிறக்கும் குழந்தை தேவாதிதேவன் ஆக இருப்பான் என்ற காரணத்தினால் இந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. தன் பதவிக்கு குழந்தை மூலம் ஆபத்து வரும் என்று கவலைப்பட்டான். பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அப்படி ஒரு குழந்தை உருவாகக் கூடாது என்று விரும்பினான். அதனால் சிவனும் பார்வதியும் இணையும் போது அதை தடுக்க அக்னி அனுப்பினான். அதற்கான முயற்சியில் ஈடுபட்ட அக்னிதேவன் சிவபெருமானின் வீரியத்தை தாங்க முடியாமல் மன்னிப்புக் கோரி அவரிடமே சரணடைந்தார். 


சிவன் அந்த வீரியத்தை கங்கையில் சேர்க்குமாறு அக்னி தேவனுக்கு யோசனை சொன்னார். அப்படி கங்கையில் சேர்க்கப்பட்டு உருவான குழந்தைதான் அங்காரகன் என்றும் முருகனின் அம்சம் என்றும் சொல்லப்படுகிறது.






அங்காரகனுக்கு உரியவை

ராசி                                                                    மேஷம் விருச்சகம்

திக்கு                                                               தெற்கு

அதிதேவதை                                                நிலமகள் சுப்பிரமணியர்

பிரத்யதி தேவதை                                     ஷேத்திரபாலகர்

தலம்                                                               வைத்தீஸ்வரன் கோவில்

நிறம்                                                              சிவப்பு

வாகனம்                                                      ஆட்டுக்கடா



அங்காரகனுக்கு பிரீதியானவை


தானியம்                                                     துவரை

மலர்                                                             செண்பகம் செவ்வரளி

வஸ்திரம்                                                   சிவப்பு ஆடை

ரத்தினம்                                                    பவளம்

நிவேதனம்                                              துவரம் பருப்பு பொடி அன்னம்

சமித்து                                                      கருங்காலி

உலோகம்                                                செம்பு

வடிவம்                                                     முக்கோணம்




செவ்வாய் யந்திரம்






ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றால்  தைரியம் வீரம் இருக்காது. மிகவும் பயந்த சுபாவம் எதிலும் காரியத் தடைகளும் உண்டாகும். இப்படிப்பட்டவர்கள் மேலே உள்ள யந்திரத்தை செப்பு அல்லது வெள்ளி தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து வெள்ளி தாயத்தில் அடைத்து கையிலோ அல்லது இடுப்பிலோ கட்டிக் கொண்டால் நல்லதே நடக்கும்.


செவ்வாய் பகவானால் ஏற்படும் பாதிப்புகள்


செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 2 4 7 8 12 இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படுகிறது இது திருமண விஷயங்களில் மிகுந்த பாதிப்பைத் தருகிறது.


செவ்வாய் லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி என்ற விதிப்படி இளைய சகோதரரை பாதிக்கிறது.



செவ்வாய் காயத்ரி

"வீர த்வஜாய வித்மஹே 
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்"


செவ்வாய் லக்னத்திற்கோ சந்திரனுக்கோ எட்டாமிடத்தில் இருந்தால் ரத்த தோஷம் ஆகிறது இதனால் உடம்பில் ரத்த சம்பந்தப்பட்ட நோய் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு


மண் மனை வீடு ரியல் எஸ்டேட் போன்றவற்றில் தொழில் செய்ய இவரின் அனுகூலம் தேவை.







ஸ்லோகங்கள்


"சிறப்புறு மணியே செவ்வாய் தேவே 
குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ 
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி 
அங்காரகனே அவதிகள் நீக்கு". !!


"வசனநல் தைரியம் தான் மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போரில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவர் அவர்க்கு நீள்நிலம்
தன்னில் நல்கும் குசன் நில மகனாம் 
செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி'!!


அங்காரக ஸ்ததி

"தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யஹம்"


சௌந்தர்யலஹரி

"தடில்லேகாதந்வீம் தபநஸஸி வைஸ்வாநர மயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலா நாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மம மாயேந மநஸா
மஹாந்த பஸ்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம்"

(சத்துருக்களை வெற்றிகொள்ள தினமும் 9 முறை இந்த சௌந்தர்யலஹரி பாராயணம் செய்யலாம்)


கடன்பட்டு நெஞ்சம் கலங்கும் அனைவரையும் கடனை தீர்க்க உதவி செய்பவர் அங்காரகன்.  கந்தபுராணத்தில் கடனை தீர்க்க 12 சுலோகங்கள் அங்காரகனை மீது பாடப்பட்டுள்ளன. நான்கு பேருக்கு முன்னால் தலைகுனிந்து நிற்கும் நிலையை வந்தாயிற்று என்று வேதனை படுவார்கள் செவ்வாய் பகவானை வணங்கினால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவது நிச்சயம்.


ருத்ரகவசம்


சிவாச்சாரியர்களிடம் சென்று ருத்ரகவசம் பெற்று வீட்டில் வைத்து அதற்குரிய மூல மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டி வழிபட்டு வர சகல தோஷமும் நீங்கும்.







கந்த சஷ்டி கவசம்


செவ்வாய் கிழமை அன்று மாலை விளக்கேற்றி செவ்வாய் ஓரையில் கந்த சஷ்டி கவசத்தை மனமுருகி படித்து வர சகல தோஷமும் நீங்கும்.


துர்கா பூஜை
 
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில்
துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் துன்பம் பறந்தோடும்.


கடன் தீர


செவ்வாய்க்கிழமையன்று செவ்வாய் ஓரையில் கடன் கொடுத்தவரிடம்
சிறு தொகை கொடுத்தால் விரைவில் கடன் தீரும்.



வாழ்க வளமுடன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்