நமது பூர்வ புண்ணியத்தின் பலனை இப்பிறவி. சென்ற பிறவியில் நாம் விட்டுச் சென்ற நன்மையையும் தீமையும் அனுபவிக்கவே இப்பிறவி எடுத்து இருக்கிறோம். நமது சேமிப்பு தகுந்த பலனை அனுபவிக்கும் அத்தகைய சேமிப்பை, அதன் பலனை அனுபவிக்கும் பாக்கியம் உடையவர்களாக இவைகளை உணர்த்துபவர் குரு.
உழைப்புக்கேற்ற ஊதியம், உழைப்பிற்கு அதிகமாக வேறு சிலருக்கு ஊதியம் கிடைக்கிறது, ஆயிரத்தில் ஒருவருக்கு உழைப்பின்றி செல்வம் செய்கிறது; அதற்குப் பெயர் அதிர்ஷ்டம் என்கிறார்கள். இன்றைய சமுதாய சூழ் நிலையில் பரிசு சீட்டு, குதிரைப்பந்தயம், சேர் மார்க்கெட் இவைகளில் எதிர்பாராத நிலையில் செல்வம் கிடைக்க குருவின் கருணை இருந்தால் மட்டுமே அத்தகைய அதிர்ஷ்டத்தை அடைய முடியும்.
மதிப்பு மரியாதை மற்றவர்களால் பாராட்டப்படும் தகுதிகளை தருபவர் குருபகவான். பொதுவாக ஒருவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டி குரு தேவர். குருவை வணங்குபவர்கள் வேறு எவரையும் வணங்க தேவையில்லை என்பார்கள். காரணம் குருபகவான் தன்னை நம்பும் பக்தர்களை எவருக்கும் பணிந்து வேலை செய்ய தேவையில்லாத உயர் பதவியில் அமர்த்தி வைத்து அழகு பார்ப்பார். குருவின் அருள் இருந்தாலே மன்னாதி மன்னர்களும், நாடாளும் அரசர்களுக்கும் அருளாசி வழங்கும் தகுதி கிடைக்கும்.
அழகான மனைவி, அன்பான துணைவி ஙிடைக்க வரம் தருபவர் குரு. அழகான மனைவியை தேடி பிடித்துவிடலாம் அன்பான மனைவி அமைத்துத் தருவது குருவின் அருளே. இன்பமயமான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் குருவின் அருள் தேவை.
எத்தனை செல்வம் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லை எனில் வாழ்க்கை முழுமை அடையாது என்பது பெரியோர் வாக்கு. பிள்ளை பெற்றால்தான் பெண்ணும் தாயாகிறாள். தாரம் என்னும் அந்தஸ்தை மாதா பிதா குரு தெய்வம் என்ற முறையில் முழுமையான ஸ்தானத்தை அளிப்பவரும் குருபகவானே.
குரு பகவான் வரலாறு
குருபகவான் பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான அங்கரிசர் முனிவருக்கும் அவர் மனைவி வசுதா என்பவளுக்கும் பிறந்த பிள்ளைகளில் ஏழாவது பிள்ளை ஆவார். இவர் அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். இந்திரனுக்கு அமைச்சராக இருப்பவர்.
இவர் கிரகங்களில் சுப கிரகம். குணங்களில் சாத்வீக குணமுடையவர். இவர் மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை பொன்னன் என்றும் வியாழன் என்றும் அழைப்பார்கள். தயாள சிந்தை உடையவர்.
அனைத்து கலைகளிலும் வேதங்களிலும் கரை கண்டவராக விளங்கினார்கள். காசியில் தங்கி அங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதன் அருகில் இருந்து பூஜை செய்து, பதினாராயிரம் தேவா ஆண்டுகள் தவம் செய்தார்.
குரு பகவானின் தவத்தை கண்டு மகிழ்ந்து அவர் முன்னே காட்சி தந்த சிவபெருமான், மிகப்பெரிய தவம் செய்து என் மனம் குளிரும்படி செய்ததால் நித்திய ஜீவனாக என்றென்றும் புகழ் பெற்று விளங்குவாய் என்றும் உன்னுடைய அறிவாற்றலும் திறமையும் இன்று முதல் நீ இந்திரனுக்கு குருவாக விளங்கக் கூடிய பாக்கியம் பெறுவாய் என்று வரம் தந்தார்.
இவருக்கு தாரை சங்கினி என்று இரு மனைவிகள். பாரத்துவாசர், எமகண்டன், கசன் என்பவர்கள் புத்திரர்கள். தன்னை வழிபடுபவர்களுக்கு பிறரை வணங்காத உயர்வான பதவியையும், மதம், நீதி, மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு செல்வம் முதலியவற்றை கொடுப்பார்.
விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஹயக்ரீவர் வடிவமும் ஒன்று. இந்த உலகத்துககு ஞானத்தை அளிக்கும் பொருட்டு விஷ்ணு பகவான் இப்படி ஹயக்ரீவராக அவதரித்தார். வைணவ மக்கள் குரு தோஷம் நீங்க ஹயக்ரீவரை வழிபடுகிறார்கள். அதுபோல் சைவப் பெருமக்கள் குரு தோஷம் நீங்க தட்சிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள். ஆக குரு பகவானின் தேவதைகளாக இந்த இரு பகவான்களும் கருதப் படுகிறார்கள்.
குரு பகவானுக்கு உரியவை
ராசி தனுசு மீனம்
திக்கு வடக்கு
அதிதேவதை பிரமன்
பிரத்யதி தேவதை இந்திரன்
தலம் திருச்செந்தூர் /ஆலங்குடி
நிறம் மஞ்சள்
வாகனம் மீனம்
குருவுக்கு பிரீதியானவை:-
தானியம் கடலை
மலர் வெண்முல்லை
வஸ்திரம் மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் புஷ்பராகம்
நிவேதனம் கடலைப் பொடி அன்னம்
தயிர் சாதம்
சமித்து அரசஞ்சமித்து
உலோகம் தங்கம்
வடிவம் நீண்ட சதுர வடிவம்
குரு யந்திரம்
குருபகவான் ஜாதகத்தில் நீச்சம் பெறாறால் மேலே உள்ள யந்திரத்தை செப்பு, வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் எழுதி தாயத்தில் அடைத்து முறைப்படி பூஜை செய்து கையில் அல்லது அரைஞான் கயிற்றில் கட்டிக் கொள்ள குருவால் ஏற்படும் தோஷம் விலகி செல்வம் குழந்தை பேறு கிடைக்கும்.
குருவினால் ஏற்படும் பாதிப்புகள்
குரு பலம் குன்றி இருந்தால் கீழே சொல்லி உள்ள பாதிப்புகள் ஏற்படும்
புத்திர தோஷம் ஏற்படும் கல்வி பாதிக்கப்படும்
தன விஷயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்
தெய்வ அனுகூலம் இருக்காது
பெரியோர்களின் அல்லது முன்னோர்களின் சாபம் ஏற்படும்
திருமணம் தாமதமாகும்
மூன்று வகை நாடிகளில் குருவினுடையது வாத நாடி. வாத நோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
குருபகவான் ஜாதகத்தில் ஒரு சுற்று வருவதற்கு 12 ஆண்டுகள் ஆகிறது.அதனால்தான் கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்கிறார்கள்.
குரு நீச்சம் பெற்று குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தாலும் குரு பகவானுக்கு சாந்தி பூஜை செய்வது மிக மிக நன்று.
குரு தியான சுலோகங்கள்
"குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரகதோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்"
"மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் அதிபனாகி
நிறைதனஞ் சிவிகை மண்ணி நீடு போகத்தை நல்கும்
இறைவன் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி."
"ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்"
குரு ஸ்துதி
"தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச
குருப் காஞ்சிப் ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்"
சௌந்தர்யா லஹரி
"அவித்யாநா மந்தஸ்திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜந்ம ஜலதெள
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹயஸ்ய பவதி"
வியாழக்கிழமை தோறும் கொண்டக்கடலை சுண்டல் வைத்து நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கும் பூவால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் தோஷம் விலகும். திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவது ஆலங்குடி திட்டை போன்ற இடங்களில் சென்று குரு பகவானை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்