குரு பக்தி


"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே".

                                                                                                  திருமந்திரம்


பொருள்


குருநாதரின் திருமேனியைக் கண்டு வணங்கினால் தெளிவு ஏற்படும். அவரின் திருநாமம் ஜெபித்தால் குழப்பம் தீரும். குருவின் அருளுர கேட்பது அஞ்ஞானத்தைப் போக்கும். அதைவிட குருவின் திருவுருவை மனதில் நிறுத்தி ஜெபித்துக் கொண்டிருந்தால் வாழ்வில் அனைத்தும் கிடைக்கும்.


விளக்கம்


மாதா, பிதா, குரு என்று சொல்லி இருக்கிறார்கள். குரு என்று ஒருவர் அமைய வேண்டியது அவசியமாகும். அவர் நல்ல வழி காட்டும் குருவாக இருத்தல் வேண்டும். குருவை எப்படி தேர்ந்தெடுப்பது? இயற்கையாகவே அமைய வேண்டும். குரு சிஷ்யன் உறவு என்பது இறைவனின் செயல் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி குரு சிஷ்யன் உறவு, குருவினால் சிஷ்யனின் வாழ்க்கையை வழி வகுத்து அழைத்துக்  செல்வார்.



ஞானசம்பந்தர் பார்ப்பதற்கு எளிமையானவராகவும் சிறியவர் ஆகவும் காட்சியளிப்பார் (குழந்தை). ஒரு நாள் அவர் நண்பர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஆண்டவனை நினைத்து தியானத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தீப ஒளியில் பல்லக்கு மரியாதைகளுடன் உமாபதி சிவம் என்ற தீச்சிதர் தெருவில் பவனி வந்து கொண்டிருந்தார். அதைப்பார்த்து "பட்டகட்டையில் பகல் குருடு ஏகுதல் பாரீர்"என்று கூறினார். இதனைக் கேட்ட உமாபதி சிவம் பல்லக்கிலிருந்து இறங்கி சம்பந்தரை  என் குரு இவரே என்று உணர்ந்தார். வணங்கி தம்மை சீடனாக ஏற்று மறைஞானம் போதிக்கும் படி கேட்டுக்கொண்டார்.



சம்பந்தர் அவரை சீடராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சென்ற இடம் எல்லாம் உமாபதிசிவம் பின்தொடர்ந்தார். சம்பந்தர் செல்லும் வழியில் தறி நெய்யும் கைக்கோளர் (செங்குந்த மரபினர்) தொழிலாளிகள் நூல் முருக்கு ஏற்றுவதற்கு சூடான கஞ்சி காய்ச்சி வைத்திருந்தார்கள். அந்தக் கஞ்சியை தனக்கு உணவாக தரும்படி கையை நீட்டினார் சம்பந்தர். கைக்கோளர்களோ சுட்டு விட போகிறது என்று பயந்து கஞ்சியை ஊற்றினார்கள், ஆனால் சூடான கஞ்சி அவர் கையை சுடவில்லை அவர் கை விரல்களின் வழியே கஞ்சி ஒழுகிற்று, அதை ஏந்தி குடிக்கும்படி உமாபதி சிவனை பணித்தார் சம்பந்தர். அப்படியே செய்தார் அதுவே அவருக்கு முதல் பிரசாதம்.








குரு என்பவர் கடினமான வேதமறை பொருள்களை தான் உள் வாங்கிக் கொண்டு, உணர்ந்து, தெளிவடைந்து பக்குவமாக சீடனுக்கு தருவதுதான் அவரது கடமை. இறைவன் அருள் இருந்தால் தொட்டிலில் இருக்கும் குழந்தைக்கு கூட குருவின் அருள் கிடைத்து விடும். இன்று பல குருமார்கள் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் உள்ள குருவை பார்ப்பது அரிது. காணிக்கையாக ஒரு தொகையை வாங்கிக் கொண்டு தீட்சை தருகிறார்கள். இது சொல்வதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.


குரு ஒருவரால் மட்டுமே சீடனின் உயர்வான வாழ்க்கையை அமைய காரணமாவார். நல்ல நிலம் பார்த்து விதையை விதைக்க வேண்டும், அதற்கு  நிலத்தை தயார் செய்து பக்குவப்படுத்த வேண்டும். அந்த நிலத்தை நன்றாக வேர் ஊடுருவிச் செல்வதற்கு அந்த நிலம் தாங்க வேண்டும். அப்போதுதான் அந்த விதை செழிப்பாக வளரும். அது போல் தான் குருவானவர் தன் சீடனையும் பக்குவப்படுத்துவார்.


குரு என்பவர் தத்துவவாதியோ, ஆசிரியரோ, அறிஞரோ, அறிவாளி யோ அல்ல. குரு என்பவர் இலக்கை அடைவதற்கு உண்டான பாதையை அல்லது வழியைக் காட்டும் உதவியாளன்.


உதவியாளன் இல்லாமல் இலக்கை அடைய முடியாதா? என்று கேள்வி வருவது இயல்பு. முயற்சி செய்து பாருங்கள். சில நேரங்களில் வழிமாறி செல்லக்கூடும். சில இடங்களில் எந்த வழியில் செல்லவேண்டும் என்ற ஐயம் ஏற்படலாம். ஆக இலக்கை சரியாக அடைவதற்கு உதவியாளன் இருந்தால் சுலபமாக எட்டிவிடலாம்; உதவியாளனே குருவாவார்.








வேதனை, கஷ்டம், துன்பம், வலி போன்றவற்றிலிருந்து விடுபட குருவினால் மட்டுமே முடியும். உடல் நலமாக இருக்கவும்; உடலும், உள்ளமும் அமைதியுடன் மற்றும் வலிமையுடன் செயல்பட குருவானவர் சூழ்நிலையை உருவாக்கித் தருவார்.



"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே"

                                                                                                                திருமந்திரம்


விளக்கம்


குரு என்பவர் அறியாமையை போக்குபவர். குருட்டினை என்பது அறியாமை. ஆக அறியாமை என்னும் குருட்டு தனத்தை நீக்க முடியாத குருவாக ஏற்றுக் கொள்பவர் ஞானத்தைத் தரும் குருவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் இருவரும் அதாவது அறிவு இல்லாதவரும் அறிவுபுகட்ட முடியாத வரும் ஆகிய இருவரும் சேர்ந்தால் துன்பம் குழியில் விழுந்து துயர் அடைவர் என்கிறார் திருமூலர்.



சீடனின் தகுதி


"நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்திலும் அப்படியே-வாச
மனையாளைப் பஞ்சனையில் மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்"

                                                                              
                                                                          (ஒளவ்வையார்)
                                                                             தனிப்பாடல்



பொருள்


நண்பனை பார்க்காத போது நெஞ்சில் எண்ணி போற்றுதல் சிறந்தது. மனைவியை பஞ்சனையில் அவளுடன் கலந்து உறவாடும் போது போற்றுதல் வேண்டும். பிள்ளைகளை உள்ளத்தில் பாராட்டி கொள்ள வேண்டும். ஆனால் ஆசானை (குரு) நேரிலும் மற்றும் காணாத போதும் போற்றுதல் வேண்டும்.










பகவத் கீதையில் இரண்டாவது அத்தியாயம் ஏழாவது சுலோகத்தில்
"ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்"

ஸிஷ்ய- சீடன்

ஜாதி - அறிவுரை

மாம் - எனக்கு

ப்ரபந்நம்- சரணடைந்த

த்வாம் - உங்களை


உங்களுடைய சீடன். உங்களை சரணடைந்த எனக்கு அறிவுரை கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன்.


சீடர்கள் பலவிதம் உபதேசம் பெற்றுக் கொண்டு தன் திறமையில் ஆணவம் கொள்பவனுக்கு குருவைத் தவிர மற்றவரிடம் விசுவாசம் அல்லது அன்பு இல்லாதவனுக்கு அருள் கிடைப்பது அரிது.


 இங்கு அர்ஜுனன் நான் உங்கள் சீடன் என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் வேறு புகல் எனக்கு கிடையாது என்று மனத்தடன் கூறுகிறான் பகவானே நான் உங்களுக்கு சீடன் மட்டுமல்ல உங்களை சரணடைகிறேன். "பிரபந்நம்" என்று கூறுவதற்கு பொருள் இதுதான்.







கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் உள்ள பழக்கவழக்கங்கள் பல இடங்களில் சமமானவர்கள். நண்பர்களைப் போல. நண்யனால் ஆலோசனை கிடைக்கலாம் உபதேசம் கிடைக்காது. தூண்டுதல் பெறலாம் இப்படி செய் என்ற ஆணை கிடைக்காது. எனக்கு அறிவுரையோ தூண்டுதலோ போதாது. எனக்கு ஒரு குரு வேண்டும் அவர் உபதேசம் எனக்கு வேண்டும்."இதான் உனக்கு ஸ்ரேயஸ்" வழிகாட்டுபவர் வேண்டும்.


குருநாதர் பரமேஸ்வரனுக்கு சமமானவர் என்று நம்பவேண்டும் தனக்குப் புகழ் இடமில்லை. பிடித்துக் கொள்பவர்கள் இல்லை. தனக்கு புத்தி இல்லை. பலமில்லை என்று தன்னைப் பற்றி நினைக்க வேண்டும்.


சக்தி, ஞானம், குருநாதரிடம் ஒப்பற்ற அன்பு, முதலியன உடையவராகவும், திடமாகவும், வேறொன்றும் வேண்டாம் என்று பொறுப்பை ஒப்புவித்து,  அவருடைய திருவடிகளில் இருப்பது. கண்கொட்டாமல் அவருடைய அழகான நிலவு போன்ற முகத்தை தரிசனம் செய்வது; தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் திருமூலரும் சொல்கிறார்.


வாழ்க வளமுடன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்